உங்களுக்காக நாங்கள் கொண்டுள்ள பற்றுறுதிகளையும், உங்களிடமிருந்து நாங்கள் வேண்டுவன யாவை என்பதையும், உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால் உங்களுக்கிருக்கும் விருப்பத் தெரிவுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தப் பக்கத்தில்:
- எங்கள் சாசனம் குறித்து
- உங்களுக்கான எமது பற்றுறுதி
- உங்களைக் குறித்து நாங்கள் என்ன கேட்கிறோம்
- முடிவொன்றை மறுஆய்வு செய்திட விரும்பினால் நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
- எங்களது சேவையில் உங்களுக்குத் திருப்தியில்லை என்றால் நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
- எங்களுடன் எவ்விதம் தொடர்பு கொள்வது
எங்கள் ‘சாசனம்’ குறித்து
நாங்கள் தான் அவுஸ்திரேலியாவின் வரி, ஓய்வுகால நிதி (‘சூப்பர்’), மற்றும் தொழில் பதிவகச் சேவைகளை நிர்வகிக்கிறோம். நாங்கள் அரசின் ஆதாயத் திட்டங்களை சமுதாயத்திற்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதிலும் துணைபுரிகிறோம்.
சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, சமுதாய உள்கட்டமைப்பு போன்று, அவுஸ்திரேலியாவில் நாம் அனுபவிக்கும் வாழ்க்கை முறைக்குத் துணைபுரிவதற்கு, எங்களது சேவைகள் இன்றியமையாதவையாகும்.
இது நடந்தேறுவதற்கு உதவ, உங்களுக்கென்று ஒரு பங்கு உள்ளது. சில நேரங்களில் எங்களோடு இணைந்து பணியாற்றுவதும் உங்களது கடமைகளில் ஒன்றாகி விடும்.
எங்களோடு இணைந்து பணியாற்றும் ஒவ்வொரு முறையும், உங்களுக்கு ஏற்படும் அனுபவம் எளியதாகவும், தொழில்முறையிலானதாகவும் இருப்பதை உறுதி செய்திட நாங்கள் விரும்புகிறோம்.
இந்த ‘சாசனம்’:
- நீங்கள் எங்களோடு பேசும் போது, நீங்கள் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்பதை உங்களுக்கு விளக்கிச் சொல்கிறது
- எங்களோடு பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் தேவையானதாகிறது
- நாம் இருவரும் பின்பற்றியாக வேண்டிய சட்டங்கள், விதிகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையிலானது.
நாங்கள் எடுக்கும் முடிவொன்றில் உங்களுக்கு சம்மதம் இல்லை என்றாலோ, அல்லது நாங்கள் இச் ‘சாசன’த்தைப் பின்பற்றி நடக்கவில்லை என்றாலோ, உங்களால் மேற்கொள்ள இயலுமான நடவடிக்கைகளும் உள்ளன.
உங்களுக்கான எமது பற்றுறுதி
நியாயமாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் நடத்தப்பெறுதல்
உங்களோடு எங்களுக்குள்ள உறவானது, பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையிலானதாகும். நாங்கள் ஆற்றும் அனைத்துப் பணிகளிலும், நாங்கள் நியாயமாகவும், நெறிமுறையாகவும், பொறுப்புடனும் இருப்பதில் பற்றுறுதி கொண்டுள்ளோம்.
பின் வருவனவற்றை நாங்கள் செய்வோம்:
- உங்களை, கண்ணியத்தோடும், அக்கறையோடும், மரியாதையோடும் நடத்துவோம்
- நேர்மையாகவும், நியாயமாகவும் செயல்படுவோம்.
- பாகுபாடு இல்லாமல் இருந்து, நல் நம்பிக்கையோடு செயல்படுவோம்
- மற்றபடி யோசிப்பதற்கான காரணம் எங்களிடம் இருந்தால் ஒழிய, நீங்கள் நேர்மையானவராக இருப்பதாகவே உங்களை நடத்துவோம், அதோடு விளக்கம் சொல்வதற்கானதோர் சந்தர்ப்பத்தைக் கொடுப்போம்
- தொழில்முறையிலான ஆலோசகர் ஒருவரைப் போன்று, உங்களுக்குப் பிரதிநிதியாகச் செயல்பட நீங்கள் தெரிவு செய்துள்ளவர்களோடு இணைவாய்ப் பணியாற்றுவோம்.
தொழில்முறையிலான சேவை
சட்டப் பிரகாரம் உங்களுக்குள்ள உரிமைகளும், கடமைகளும் சிக்கலானவையாக இருக்கலாம் என்பதை நாமறிவோம். உங்களது உரிமைகளைப் புரிந்து கொண்டு, உங்கள் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்ய உங்களுக்கு உதவுவதற்காக, உங்களுக்கு நம்பகமான, பெற்றுப் பயனடையக்கூடிய தகவல்களையும், சேவைகளையும் அளிப்பதே எமது குறிக்கோள்.
நாங்கள்:
- மறுமொழி அளிப்பதற்கான பொறுப்புள்ளவர்களாக இருந்து, உரிய நேரத்தில், துல்லியமானதும், புரிந்து கொள்ள எளிதானதுமான தகவல்களைத் தருவோம்
- எங்களது திட்டங்களையும், சேவைகளையும், உபயோகிக்க எளிதானதானவையாகவும், அனைத்தையும் உள்ளடக்கியவையாகவும் இருக்கச் செய்வதற்காக சமுதாயத்தோடு இணைந்து பணியாற்றுவோம்
- மாற்று அணுகுமுறை ஒன்று இன்னும் அதிகம் ஏற்றதாக இருந்தால் ஒழிய, எங்கள் சேவைகளை இணைய வாயிலாகவே தருவோம்.
ஆதரவுதவி மற்றும் ஒத்தாசை
மக்களுக்கு வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு நேரங்களில் உதவி தேவைப்படலாம் என்பது எங்களுக்குப் புரிகிறது. தாக்குதலுக்கு ஆளாகும் நிலைமை, சிரமமான சூழ்நிலைகளை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற பட்சத்தில் அல்லது நெருக்கடி நிகழ்வுகளால் நீங்கள் தாக்கமுற்றிருக்கிற பட்சத்தில், உங்களது கடைமைகளை நிறைவேற்றுவது கடுமையானதாக இருக்கலாம் என்பது எங்களுக்குத் தெரிகிறது. பெரும்பாலான நிலைகளில், உங்களது கடமைகளை எங்களால் அகற்ற முடியாது என்கிற அதே வேளையில், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு உங்களுக்கு உதவக்கூடிய வழிகள் அங்கே இருக்கலாம்.
பின் வருவனவற்றை நாங்கள் உறுதி செய்கிறோம்:
- உங்கள் சூழ்நிலைகளை செவிகொடுத்துக் கேட்டு, எங்களால் முடிகிற இடங்களில் அவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்
- நெருக்கடி நிகழ்வுகளின் போதும், சிரமமான நேரங்களின் போதும், உதவியளிப்போம்
- எங்களது சேவைகளைப் புரிந்து கொள்வதில் அல்லது பெற்றுப் பயனடைவதில் உங்களுக்கு உதவி தேவையானால் உதவி செய்வோம்.
உங்களைப் பற்றிய தரவுகளின் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கத்தன்மை
உங்கள் தகவல்களையும், தரவையும் வெகு கவனமாய்ப் பாதுகாக்க நாங்கள் பொறுப்பேற்கிறோம். இந்த நவீன இணைய உலகில், உங்கள் தனிப்பட்ட தகவல்களின் அந்தரங்கமும், பாதுகாப்பும் எந்த அளவிற்கு முக்கியம் என்பது எங்களுக்குத் தெரிகிறது.
நாங்கள்:
- உங்கள் அந்தரங்கத் தன்மைக்கு மதிப்பளித்து, சட்டம் அனுமதிக்கிற இடங்களில் மட்டுமே உங்களைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவோம்
- உங்கள் தரவையும் இணையப் பரிவர்த்தனைகளையும், பாதுகாப்பானதாகவும் பத்திரமானதாகவும் வைத்துக் கொள்வதற்கு, ‘பன்னடுக்கு இணையப் பாதுகாப்பு மற்றும் அடையாளப் பாதுகாப்பை’ (multiple layers of cyber security and identity protection) உபயோகிப்போம்
- எங்களது சேவைகளை வழங்க, நெறிமுறையோடும், சட்டப்பூர்வமாகவும் தரவுகளைப் பெற்று, அவற்றைப் பயன்படுத்தி, பகிர்வோம் .
உங்களுக்குத் தொடர்ந்து தகவல் தெரிவித்துக்கொண்டிருப்போம்
உங்களோடும், சமுதாயத்தோடும் நாங்கள் கொள்கிற உரையாடல்களில், வெளிப்படைத்தன்மையோடும், பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பதில் பற்றுறுதி கொண்டுள்ளோம்.
நாங்கள்:
- எங்களது முடிவுகளை விளக்கிச் சொல்வோம்
- எங்களது முன்னேற்றம் குறித்து, உங்களுக்குத் தொடர்ந்து தகவல் தெரிவிப்போம்
- உங்களது உரிமைகள், கடமைகள் மற்றும் மீளாய்வு வாய்ப்புகளைத் தெரிவித்து, விளக்கிச் சொல்வோம்
- உங்கள் தகவல்களை அணுகுவதற்கானவாய்ப்பைக் கொடுத்து, உரிய இடத்தில், முடிவுகளை எடுக்க உதவுவதற்கான தகவல்களைக் கொடுப்போம்.
உங்களைக் குறித்து நாங்கள் என்ன கேட்கிறோம்
உங்களது சூழ்நிலைகளைப் பொருத்து, சட்டத்தின் கீழே உங்களுக்குப் பல்வேறு விதமான கடமைகள் இருக்கும்.
எங்களை மதிப்போடும், எம்மைக் கருத்தில் கொண்டும், மரியாதையோடும் நடத்துங்கள்.
சட்டத்திற்குட்பட்டு, உண்மையுள்ளவர்களாகச் செயல்படுங்கள்.
எங்களது கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதிலளித்து, உரிய தகவல்கள் அனைத்தையும் எங்களுக்கு வழங்குங்கள். எமது புரிதல்கள் சரியானவையாகவும், தற்சமயத்தியவையாகவும் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக, நாங்கள் உங்களிடம் கேள்விகளைக் கேட்கலாம் அல்லது இன்னும் அதிகத் தகவல்களை சேகரிக்கலாம்.
உங்களுக்குப் பிரதிநிதியாக ஒருவர் இருந்தால், அதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். எங்களிடம் கொடுத்த தகவல்கள் துல்லியமானவை என்பதை உறுதி செய்வதற்கான பொறுப்பு இப்போதும் உங்களுக்கு உண்டு.
உரிய நேரத்தில் பதிவு செய்வது, பணம் செலுத்துவது உள்ளிட்ட உங்கள் கடமைகளைப் பூர்த்தி செய்யுங்கள். உங்களால் முடியவில்லை என்றால், நாங்கள்உங்களுக்கு உதவ ஏது செய்யும் வகையில், தவணைத் தேதிக்கு முன்பாகவே கூடிய விரைவில் எங்களுக்குத் தெரிவியுங்கள்.
பதிவுகளை நன்றாகப் பராமரித்து வைத்து, அவசியமாகும் போது எங்களிடம் கொடுங்கள்.
உங்களது அடையாளத் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்துகொள்ள கவனமெடுத்து, உங்களது விவரங்கள் மாறினால் எங்களுக்குத் தெரிவித்திடுங்கள்.
முடிவொன்றை மறுஆய்வு செய்திட விரும்பினால் நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
எங்கள் முடிவுகளில் நாங்கள் தவறொன்றைச் செய்து விட்டோம் என்று நீங்கள் உறுதியாக நினைத்தால், கூடியமட்டும் விரைவாகவும், எளிமையாகவும், உங்களது ஐயங்களைப் போக்க நாங்கள் உங்களோடு இணைந்து பணியாற்றுவோம்.
எங்களால் சட்டத்தை மாற்ற முடியாது. இருந்தாலும், உங்களது சூழ்நிலைகளுக்கு அது எப்படிப் பொருந்துகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள எங்களால் உதவ முடியும்.
சட்ட மறுஆய்வு உரிமைகள் உள்ளிட்ட உங்களுக்குள்ள வழிவகைகளையும், புகாரொன்றை எவ்விதம் செய்வது என்பதயும் நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம்.
முதல் படியாக, எங்களால் உங்கள் ஐயங்களைத் தீர்த்து வைக்க முடியுமா என்பதைப் பார்க்க முதலில் அவற்றை எங்களோடு விவாதியுங்கள். நீங்கள் பேசுவதற்காக, குறிப்பிட்டதோர் தொடர்பாளர் எண் ஒன்று உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம், இல்லை என்றால் நீங்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
எங்களது பல முடிவுகளை, அசல் முடிவில் ஈடுபட்டிராத, சுதந்திரமான அலுவலர் ஒருவரை வைத்து, மறுஆய்வு செய்யுமாறும் நீங்கள் எமக்கு வேண்டுகோள் விடுக்கலாம்.
எங்களது உள்ளக மறுஆய்வில் உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால், நீங்கள் வெளிப்புற மறுஆய்வு ஒன்றைச் செய்ய வேண்டுமெனக் கேட்கலாம். பெரும்பாலான நிலைகளில், வெளிப்புற மறுஆய்வு ஒன்றை நாடுவதற்கு முன்பாக, நீங்கள் முன்பாகவே ஒரு உள்ளக மறுஆய்வுக்கு வேண்டுகோள் விடுத்து, அதன் முடிவில் உங்களுக்குத் திருப்தி இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
நீங்கள் எதிர்க்கிற முடிவின் வகையைப் பொருத்து, நீதிமன்றங்கள், நடுவர் மன்றங்கள் போன்ற, வெளிப்புற மறுஆய்வுக்கான பல்வேறு விதமான வழிவகைகள் உங்களுக்கு இருக்கலாம்.
எங்களது சேவையில் உங்களுக்குத் திருப்தியில்லை என்றால் நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
உங்களுக்கு எப்போது திருப்தியில்லை என்பதை எங்களுக்குத் தெரிவிப்பது முக்கியமானதாகும், அவ்வகையில், எங்களால் எங்களது சேவையைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள முடியும்.
நாங்கள் உங்களது எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்திருக்கவில்லை என்றாலோ, எங்களது ‘சாசன’த்தை நாங்கள் பின்பற்றியிருக்கவில்லை என்று நீங்கள் நினைத்தாலோ, நீங்கள் எடுக்க முடிகிற பல்வேறு நடவடிக்கைகள் இருக்கின்றன:
- முதல் படியாக, உங்கள் ஐயங்களை ஒரு ATO அதிகாரியுடன் விவாதியுங்கள், அவர் உங்கள் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்பார். நீங்கள் பேசுவதற்காக, குறிப்பிட்டதோர் தொடர்பாளர் எண் ஒன்று உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம், இல்லை என்றால் நீங்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
- நீங்கள் திருப்தியடையவில்லை என்றால், நீங்கள் மேலாளர் ஒருவரிடம் பேச வேண்டுமெனக் கேட்கலாம்.
- இப்போது, இதுவும் உங்கள் ஐயங்களைத் தீர்க்காத பட்சத்தில், எங்களது நடைமுறைகளை மேம்படுத்திக் கொள்ள நீங்கள் பின்னூட்டக் கருத்து தரலாம் அல்லது முறைப்படியான புகார் ஒன்றைப் பதிவு செய்யலாம்.
நாங்கள் எல்லாப் புகார்களையும் தீவிரமானவையாகவே நடத்துகிறோம், அத்தோடு அவற்றை விரைவாகவும், நியாயமாகவும் தீர்த்து வைப்பதைக் குறிக்கோளாய்க் கொண்டுள்ளோம்.
புகார் ஒன்றைச் செய்வது, எங்களோடு உங்களுக்குள்ள உறவைப் பாதிக்காது.
எங்களிடம் புகார் தெரிவித்த பிறகும் நீங்கள் திருப்தியடையவில்லை என்றால், தனிப்பட்ட விசாரணைக்கு நீங்கள் ‘வரிவிதிப்பு பொது-ஆய்வாளர்’ மற்றும் ‘வரிவிதிப்பு குறைதீர்ப்பு ஆணைய’த்துடன்External Link தொடர்பு கொள்ளலாம்.
பின்வரும் நிலையில் நீங்கள், இழப்பீட்டிற்கு விண்ணப்பிக்கவும் செய்யலாம்:
- எங்களது நடவடிக்கைகள் சட்டப்பூர்வக் கடப்பாட்டை உயர்த்தியிருக்கிறது என்று நீங்கள் நம்பினால்
- எங்களது குறைபாடான நிர்வாகத்தின் காரணமாக உங்களுக்கு நிதி சார்ந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால்.
எங்களுடன் எவ்விதம் தொடர்பு கொள்வது
உங்களுக்கான எமது பற்றுறுதிகள் எவற்றையும் குறித்து அல்லது உங்களைப் பற்றி நாங்கள் கேட்பவை குறித்து, உங்களுக்குக் கேள்விகளோ அல்லது ஐயங்களோ இருந்தால், எம்முடன், அல்லது தொழில்முறையிலான ஆலோசகர் ஒருவருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Know our commitments to you, what we ask of you and options if you are not satisfied.