ato logo
Search Suggestion:

அவுஸ்திரேலியாவிலுள்ள வரி: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதென்ன

Last updated 28 September 2021

நீங்கள் அவுஸ்திரேலியாவிற்குப் புதியவரென்றாலோ, அல்லது ஆங்கிலம் உங்களது இரண்டாவது மொழியென்றாலோ, இந்த மேலோட்டம், அவுஸ்திரேலியாவில் இருக்கிற வரி குறித்த சில கேள்விகளுக்கு விடைபெற உதவும். இந்தப் பிரசுரம் உங்கள் விருப்ப மொழியிலும் கிடைக்கலாம்.

உங்களால் இந்தத் தகவல்களை, போர்ட்டபிள் டாக்குமெண்ட் பார்மேட் வடிவிலும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் – அவுஸ்திரேலியாவிலுள்ள வரி: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதென்ன (PDF, 429KB)This link will download a file

இந்த வழிகாட்டியில்:

நாம் ஏன் வரி செலுத்துகிறோம்

அவுஸ்திரேலியர்களாக, நாம் நல்லதோர் சுகாதார அமைப்பையும், தரமான கல்வியையும், பல்வேறு விதமான சமுதாய வசதிகளையும் (உதாரணமாக, பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள்) அணுகிப் பயனுற்று மகிழுகிறோம். இவற்றையெல்லாம் வரி வசூலிப்புகள் மூலமாகவே சாத்தியமாக்குகிறோம்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் பின்வருபவை உள்ளிட்ட சேவைகளைத் தரச் செய்வதற்காக Australian Taxation Office (அவுஸ்திரேலிய வரிவசூலிப்பு அலுவலகமே) (ATO) இவ்வரிகளை வசூலித்துத் தருகிறது:

  • சுகாதாரக் கவனிப்பு
  • கல்வி
  • பாதுகாப்பு
  • சாலைகள் மற்றும் இருப்புப்பாதைகள்
  • நலதிட்டங்கள், பேரழிவு நிவாரணம் மற்றும் ஓய்வூதியங்களுக்குப் பணம் கொடுத்தல்.

நீங்கள் பணிபுரிய ஆரம்பிப்பதற்கு முன்பாக

இந்தப் பிரிவில்:

அவுஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கான அனுமதி

நீங்கள் அயல்நாட்டில் வசிப்பவராக இருந்தால், நீங்கள் அவுஸ்திரேலியாவில் பணிபுரிய ஆரம்பிப்பதற்கு முன்பாக, நீங்கள் Department of Home Affairs இல் இருந்து அனுமதி பெற்றாக வேண்டும். Home Affairs, எந்த விசா அவுஸ்திரேலியாவில் பணிபுரிய உங்களை அனுமதிக்கும் என்பது உள்ளிட்ட பல பயனுள்ள தகவகளை வழங்க முடியும்.

அடுத்த படி:

  • Home AffairsExternal Link (வெளிப்புற இணையதளத்திற்கான இணைப்பு)

பெறுக: tax file number (வரி தாக்கல் எண்)

உங்கள் tax file number (TFN) என்பது, உங்களுக்கான தனிப்பட்டக் குறிப்பு எண் ஆகும். ஒரு TFN எண்ணைப் பெறுவது இலவசமானதாகும்.

நீங்கள் பணிபுரிய ஆரம்பிப்பதற்கு முன், அல்லது பணிபுரிய ஆரம்பித்த பிறகு கூடிய விரைவில், ஒரு TFN எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் நீங்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும். நாங்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காகவும், பதிவுகளைப் பராமரிக்கும் நோக்கங்களுக்காகவும், தனிநபர்கள், தொழில்கள் மற்றும் மற்ற ஸ்தாபனங்களுக்கும் TFNs எண்களை வழங்குகிறோம்.

உங்கள் TFN எண்ணுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது உங்களது சூழ்நிலைகளைப் பொருத்தே இருக்கும்.

உங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போது, உங்கள் அடையாளத்தை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் உங்களுக்குத் தேவையாகும்.

உங்களது TFN எண் விண்ணப்பத்தில் நடவடிக்கை எடுத்து உங்கள் TFN எண்ணை உங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்பதற்கு 28 நாட்கள் வரை ஆகலாம்.

உங்களுக்கு உங்களது TFN எண் வந்து சேர்ந்ததும், அதைப் பத்திரமாக வைத்துக் கொள்வதும், வேறு எவரும் அதை உபயோகிக்க விடாமல் இருப்பதும் முக்கியமானதாகும்.

அடுத்த படி:

Australian business number (ABN) (அவுஸ்திரேலிய வியாபார எண்) வியாபாரத்திற்கானதாகும்

அவுஸ்திரேலியாவில் பணிபுரிவதற்காக Australian business number (ABN) (அவுஸ்திரேலிய வியாபார எண்) பெறுவதற்கு எல்லோருக்கும் உரிமையில்லை அல்லது அவசியமுமில்லை. ஒரு ABN எண்ணை வைத்திருக்கிறீர்கள் என்பதன் பொருள், நீங்கள்:

  • உங்கள் சொந்த வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்
  • உங்கள் சொந்த வரியை எங்களுக்குச் செலுத்த வேண்டியுள்ளது
  • உங்கள் சொந்த ஓய்வூதியத்திற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளது
  • உங்களுக்குக் காயமேற்படுகிற பட்சத்தில், காப்பீடு இல்லாமல் இருக்கலாம்.

இதையும் பாருங்கள்:

நீங்கள் பணிபுரிய ஆரம்பிக்கும் போது

இந்தப் பிரிவில்:

Tax file numberபிரகடனம் ஒன்றைப் பூர்த்தி செய்க

நீங்கள் பணிபுரிய ஆரம்பித்ததும், உங்களைப் பணிக்கு அமர்த்தியவர் உங்களிடம் Tax file number declaration (Tax file number பிரகடனம்) ஒன்றைப் பூர்த்தி செய்து தந்து, உங்களது TFN மற்றும் தனிப்பட்ட தகவல்களை அவர்களிடம் சொல்லுமாறு கேட்பார்கள்.

அவர்கள் இந்தப் பிரகடனத்தை, நீங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட உபயோகிப்பார்கள். இப்பிரகடனத்தைப் பூர்த்தி செய்து, உங்களைப் பணியமர்த்தியவரிடம் தருவதற்கு உங்களுக்கு 28 நாட்கள் அவகாசமுண்டு. நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்றால், அவர்கள் உங்களது சம்பளத்திலிருந்து அதிக விகிதத்தில் வரிப் பிடித்தம் செய்தாக வேண்டும்.

வரி நோக்கங்களுக்காக நீங்கள் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஒருவராக இருக்கிற பட்சத்தில், உங்களது பிரகடனத்தைப் பூர்த்தி செய்து தரும்போது, அதில் வரி-இல்லாத உச்சவரம்பை உங்களால் கோரிப்பெற முடியும். இதன் பொருள், உங்களது வருடாந்திர வருமானத்தில், முதல் $18,200 தொகைக்கு வரிவிதிப்பில்லை.

பொதுவாகவே உங்களால் ஒரு பணியமர்த்துவரிடமிருந்து மட்டுமே வரி-இல்லாத உச்சவரம்பைக் கோரிப்பெற முடியும். உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பணியமர்த்துபவர்களிருந்தால், உங்களுக்கு மிக உயர்ந்தளவு சம்பளம் அல்லது கூலியைக் கொடுக்கிற பணியமர்த்துபவரிடமிருந்தே, நீங்கள் வரி-இல்லாத உச்சவரம்பைக் கோரிப்பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதையும் பாருங்கள்:

வரி செலுத்துதல்

உங்களைப் பணியமர்த்துபவர் உங்களுக்கு சம்பளம் அல்லது கூலியைக் கொடுக்கும் போது, அவர்கள் அதில் வரியை எடுத்துக் கொண்டு, அதை எங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு வரியைச் செலுத்தியிருக்கிறீர்கள் என்பது உங்களது சம்பளப் பட்டியலில் தெரியும். நிதி ஆண்டின் இறுதியில் உங்களது வருமானக் கணக்கு அறிக்கை அல்லது சம்பள சுருக்க விவரமே, உங்களைப் பணியமர்த்தியவரிடமிருந்து பெற்ற உங்களது மொத்த வருமானத்தையும், அவர்கள் எவ்வளவு வரியை எடுத்துச் செலுத்தியிருக்கிறார்களென்பதையும் காண்பித்துவிடும். உங்களது வருமானக் கணக்கு அறிக்கை ATO online services இல் myGov வாயிலாகக் கிடைக்கிறது.

நீங்கள் செலுத்துகிற வரியின் அளவு பின்வருவனவற்றைப் பொருத்திருக்கிறது:

  • உங்கள் வரி வசிப்புநிலை
  • நீங்கள் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறீர்கள்
  • உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகள் இருக்கின்றனவா
  • உங்களுக்கு ஒரு tax file number (TFN) அவசியமா- இது ஒரு தனிப்பட்ட குறிப்பு எண் ஆகும், உங்களைப் பணியமர்த்துபவருக்காக நீங்கள் வேலை செய்ய ஆரம்பித்ததும், இதை அவர்களிடம் நீங்கள் சொல்லிவிட வேண்டும்.

பணியமர்த்தும் சிலர், சம்பளத்தை வங்கிக் கணக்கொன்றில் செலுத்துவதை விட, ரொக்கமாக கொடுத்துவிடவே விரும்புகிறார்கள். இது சரி தான், இருந்தாலும் அவர்கள் அப்போதும்:

  • அவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் பணத்தில் இருந்து வரியைப் பிடித்தம் செய்ய வேண்டும்
  • எவ்வளவு வரியைப் பிடித்தம் செய்திருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிற சம்பளப் பட்டியல்களை உங்களுக்குக் கொடுத்திட வேண்டும்
  • உங்கள் சார்பாக உங்களது பணி ஓய்வுப் பங்களிப்பைக் கொடுத்திட வேண்டும் (பணி ஓய்விற்கு நீங்கள் தகுதியடைந்தால்).

உங்களிடம் ஒரு TFN எண் வருவதற்கு முன்பே நீங்கள் பணிபுரிய ஆரம்பித்து விட்டீர்கள் என்றால், அவ்வெண் ஒன்றைப் பெற்று அதை உங்களைப் பணியமர்த்துபவரிடம் கொடுப்பதற்கு உங்களுக்கு 28 நாட்கள் அவகாசம் உள்ளது. நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்றால், உங்களைப் பணியமர்த்தியவர் உங்களது சம்பளத்திலிருந்து அதிக விகிதத்தில் வரிப் பிடித்தம் செய்தாக வேண்டும்.

இதையும் பாருங்கள்:

பணி ஓய்வு

பணி ஓய்வு (சூப்பர்) என்பது, உங்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதற்காக, உங்களது பணியாற்றும் காலத்தின் போது ஒதுக்கி வைக்கும் பணமாகும். புதிய பணியொன்றைத் துவக்கும் போது, ஓய்வூதியம் எவ்விதம் வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்வதும், உங்களுக்குள்ள உரிமைகள் மற்றும் தகுதிகள் குறித்துத் தெரிந்து கொள்வதும் முக்கியமானதாகும்.

ஓய்வூதியப் பணம் என்பது, உங்களது சம்பளத்திற்குக் கூடுதலாக கொடுக்கப்படுவதாகும். நீங்கள் ஓய்வூதியத்திற்குத் தகுதியடைகிறவரானால், உங்களைப் பணியமர்த்தியவர் ஒரு ஓய்வூதிய நிதிக் கணக்கில் ஓய்வூதியப் பங்களிப்புத் தொகைகளைச் செலுத்தியாக வேண்டும். பெரும்பாலானவர்களால், இத்தகைய ஓய்வூதியப் பங்களிப்புத் தொகைகளை எந்த ஓய்வூதிய நிதியில் செலுத்த வேண்டும் என்பதைத் தெரிவுசெய்துகொள்ள முடியும்.

உங்களது ஓய்வூதியக் கணக்கில் சரியான ஓய்வூதியப் பணப்பட்டுவாடாக்களைச் செய்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொள்வதற்கு, உங்களது ஓய்வூதிய நிதியை சீரான கால இடைவெளிகளில் சரிபார்த்துக் கொள்வது முக்கியமானதாகும்.

இதையும் பாருங்கள்:

உங்கள் வரிக்கணக்கு

இந்தப் பிரிவில்:

யார் வரிக் கணக்கைத் தயார் செய்ய வேண்டும்?

பின்வரும் நிலையில், ஒரு தனிநபராக நீங்கள் வரிக்கணக்கொன்றைத் தாக்கல் செய்தாக வேண்டும்:

  • அந்த வரி ஆண்டின் (1 ஜூலை முதல் 30 ஜூன் வரை) போது உங்கள் சம்பளத்தில் இருந்து வரி பிடித்தம் செய்திருக்கிறார்கள்
  • உங்கள் வரி பிடித்தம் செய்யக்கூடிய வருமானம் (சில அவுஸ்திரேலிய அரசாங்கப் பணப்பட்டுவாடாக்கள் உட்பட), அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களுக்கான ஒருசில உச்சவரம்பிற்கு மேலாக இருக்கிறது
  • நீங்கள் அயல்நாட்டில் வசிப்பவராக இருந்து, அந்த வரி ஆண்டின் போது அவுஸ்திரேலியாவில் $1 அல்லது அதற்கு மேல் சம்பாதித்திருக்கிறீர்கள்.
  • நீங்கள் அவுஸ்திரேலியாவை விட்டு நிரந்தரமாக அல்லது ஒரு வரி ஆண்டிற்கும் மேலான காலத்திற்குக் வெளியேறுகிறீர்கள்.

உங்களது வரிக் கணக்கிலிருந்து கிடைக்கும், உங்களது வருமானம் மற்றும் நீங்கள்

செலுத்தியிருக்கிற தொகை போன்ற தகவல்களை, நீங்கள் கூடுதல் வரியைச் செலுத்த வேண்டுமா அல்லது உங்களுக்கு பணம் திரும்பக் கிடைக்குமா (வரி திருப்பியளித்தல்) என்பதைக் கணக்கிடுவதற்காக நாங்கள் உபயோகித்துக் கொள்வோம்.

இதையும் பாருங்கள்:

வரிக் கணக்கை தாக்கல் செய்ய உங்களுக்குத் தேவையாகும் தகவல்கள்

வரிக் கணக்கு ஒன்றைத் தாக்கல் செய்ய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது:

  • எவ்வளவு வருமானத்தை நீங்கள் பணியாற்றியதில் இருந்து (ரொக்கத் தொகைகள் உட்பட), வங்கிக் கணக்குகள் அல்லது முதலீடுகளில் இருந்து சம்பாதித்திருக்கிறீர்கள்
  • உங்கள் வருமானத்திலிருந்து எவ்வளவு வரியைப் பிடித்திருக்கிறார்கள் (உங்களைப் பணியமர்த்தியுள்ளவர் எவ்வளவு பணத்தை உங்களது சம்பளத்திலிருந்து எடுத்து எங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்)
  • நீங்கள் கோருகிற பிடித்தங்கள் மற்றும் வரிக் கழிவுகள் குறித்து.

பிடித்தங்கள் என்பவை உங்களது வரியைக் குறைக்குமாறு உங்களால் கோரமுடிகிற செலவுகளாகும். பெரும்பலான பிடித்தங்கள் பணி-தொடர்புடைய செலவுகளாகும். அதாவது, உங்களது வருமானத்தைச் சம்பாதிக்க உதவுவதற்காக நீங்கள் ஏதோவொன்றில் செலவிட்டிருக்கிற பணம். உங்களால் பின்வருவனவற்றைக் காண்பிக்க முடிந்தாக வேண்டும்:

  • அச்செலவுகள், உங்களது வருமானத்தைச் சம்பாதிப்பதோடு நேரடித் தொடர்புடையவை
  • அச்செலவுகள், அவற்றின் தன்மையில் தனிப்பட்டவையல்ல
  • உங்களது செலவுகளை நிரூபிப்பதற்கானதோர் பதிவு உங்களிடம் இருக்கிறது. (இரசீது போன்றதொன்று).

உங்களைப் பணியமர்த்தியுள்ளவர், ஒரு வருமானக் கணக்குப்பட்டியல் அல்லது சம்பளச் சுருக்க விவரத்தையோ உங்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. இது, நீங்கள் எவ்வளவு வருமானத்தைச் சம்பாதித்திருக்கிறீர்கள் மற்றும் எவ்வளவு வரியை நீங்கள் செலுத்தியிருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கிறது.

அடுத்த படிகள்:

பதிவு பராமரித்து வைத்தல்

உங்களது வரிக்கணக்கை நீங்கள் சமர்ப்பிக்கும் போது, அதை நாங்கள் பரிசீலித்துப் பார்த்து, நீங்கள் சரியான அளவு வரியைச் செலுத்தியிருக்கிறீர்களா என்பதைக் கணக்கிடுவோம். அம்முடிவை, உங்களுக்கு ஒரு மதிப்பீட்டு அறிவிப்பை அனுப்பி வைப்பதன் மூலமாக உங்களுக்குத் தெரியச் செய்வோம்.

நீங்கள் கோருகிற பிடித்தங்கள் எவற்றுக்கும், இரசீதுகள் போன்ற, பதிவுகளை நீங்கள் பராமரித்து வைத்தாக வேண்டும். நீங்கள் இப்பதிவுகளை, உங்கள் வரிக்கணக்கைச் சமர்ப்பித்ததிலிருந்து குறைந்தது ஐந்து ஆன்டுகளுக்குப் பராமரித்து வைத்திருக்க வேண்டியுள்ளது. இப்பதிவுகளைக் காண்பிக்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்கலாம்.

myDeductions - இது உங்கள் செலவு மற்றும் வருமானப் பதிவுகளை ஒரே இடத்தில் பராமரித்து வைப்பதற்கானதோர் சௌகரியமான வழியாகும். உங்கள் ஸ்மார்ட் கருவியில் ATO app பதிவிறக்கம் செய்து myDeductions ஐக்கானைத் தெரிவு செய்யுங்கள்.

இதையும் பாருங்கள்:

உங்கள் வரிக் கணக்கைப் பூர்த்தி செய்து தாக்கல் செய்யுங்கள்

இந்தப் பிரிவில்:

எப்போது வரிக்கணக்கைத் தாக்கல் செய்வது

உங்களால் உங்கள் வரிக்கணக்கை myTax உபயோகித்து இணைய வாயிலாகவோ, பதிவு செய்துள்ள வரி முகவர் வாயிலாகவோ தாக்கல் செய்ய முடியும் அல்லது காகித வடிவில் உள்ள வரிக்கணக்குப் படிவத்தைப் பூர்த்தி செய்து தரலாம். உங்கள் வரிக்கணக்கில் , ஜூலை 1 முதல் ஜூன் 30 முடியவுள்ள வருமான ஆண்டு அடங்குகிறது. நீங்கள் 31 அக்டோபருக்குள் உங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்தாக வேண்டும் அல்லது ஒரு வரி முகவரை ஈடுபடுத்தியாக வேண்டும்.

நீங்கள் myTax கொண்டு இணைய வாயிலாக தாக்கல் செய்யும் போது அல்லது வரி முகவர் ஒருவரை உபயோகிக்கும் போது, எங்களிடம் ஏற்கெனவே இருக்கிற தகவல்களைக் கொண்டு உங்களது வரிக்கணக்கை முன்பே நிரப்பித் தந்து விடுகிறோம். உதாரணமாக, வேலைவாய்ப்பு வருமானம் மற்றும் வங்கி வட்டி. பெரும்பாலானவர்களைப் பொருத்த வரையில், இது ஜூலை இறுதி வாக்கில் தயாராகிவிடும். உங்கள் தகவல்களை முன்பே நிரப்பித் தர எங்களுக்காகக் காத்திருப்பது, உங்கள் வரிக்கணக்கைக் கணக்கிடுவதை எளிதானதாகவும், அதிகத் துல்லியமானதாகவும் ஆக்கித்தரக் கூடும்.

நாங்கள் இத்தகவல்களை எங்களுக்குக் கிடைக்கிறபடியே, முன்பே நிரப்பித் தருகிறோம், அவ்வகையில் நீங்கள் அவ்விவரங்கள் சரியானவை தானா என்று சோதித்துப் பார்த்து, விடுபட்ட எதையும் சேர்த்திடவே வேண்டும்.

இதையும் பாருங்கள்:

இந்த myTax உபயோகித்து இணையவாயிலாக தாக்கல் செய்யுங்கள்

நீங்கள் myTax-ஐ உபயோகித்து இணைய வாயிலாக வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியும். இது தான் இணையவாயிலாக தாக்கல் செய்வதற்கான, விரைவானதும், எளிதானதும், பாதுகாப்பானதும், பத்திரமானதுமானதோர் வழியாகும்.

myTax-ஐ உபயோகிக்க, நீங்கள் முதலில் ஒரு myGov கணக்கை உருவாக்கி, உங்கள் கணக்கை, ATO online services-உடன் இணைத்திட வேண்டும். உங்களுக்கு தகவல்தொடர்புகள் அனைத்தும் வந்து சேர்வதையும், உங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதில் தாமதம் எதுவும் ஏற்படவில்லை என்பதையும் உறுதி செய்திட, நீங்கள் அதை வரிக் காலத்திற்கு (1 ஜூலை) முன்பே இணைத்திட வேண்டும் என்றே நாங்கள் சிபாரிசு செய்கிறோம்.

நீங்கள் ATO online services-உடன் இணைத்ததும், உங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய உங்களால் myTax -ஐ அணுகிட முடியும்.

அடுத்த படி:

பதிவு பெற்ற வரி முகவர் ஒருவரைக் கொண்டு தாக்கல் செய்யுங்கள்

உங்ளது வரிக்கணக்கைத் தயார் செய்து தாக்கல் செய்வதற்கு நீங்கள் பதிவுபெற்ற வரி முகவர் ஒருவரை உபயோகித்துக் கொள்ளலாம். நீங்கள் அவர்களை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள்ளாகவே தொடர்பு கொள்ள வேண்டும்.

அடுத்த படி:

வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான உதவி மற்றும் ஆதரவு

வரிக் காலத்தின் போது, உங்கள் வரிக்கணக்கு சம்பந்தமாக உங்களுக்கு இலவச உதவி கிடைக்கப் பெறமுடியும். எங்களது Tax Help சேவை, ஆண்டிற்கு கிட்டத்தட்ட, $60,000 அல்லது அதைவிடக் குறைவான வருமானமுள்ளவர்களுக்கானதாகும். உங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதில் உங்களுக்கு உதவி தேவையானால், எங்களது பயிற்சி பெற்ற தன்னார்வலர்களால் உங்களுக்கு உதவ இயலும். இவர்கள் myTax வசதியை உபயோகித்து ஆன்லைனில் மக்கள் தங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செ ய்வதற்கு உதவுவதற்காக, இலவசமானதும், இரகசியமானதுமானதோர் சேவையை வழங்குகிறார்கள்.

Tax Help -என்பது எல்லா தலைநகரங்களிலும், அவுஸ்திரேலியாவில் இருக்கிற மற்ற அநேக இடங்களிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் அக்டோபர் வரை இருக்கிறது.

அடுத்த படி:

உங்களது தகவல்களைப் பத்திரப்படுத்திடுங்கள்

உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பத்திரப்படுத்தி வைப்பது முக்கியமானதாகும்.

உங்கள் TFN -ஆயுளுக்கும் உங்களுடையதாக இருக்கிறது, ஆகவே அதைப் பத்திரமாக வைத்திடுங்கள். இது ஆயுளுக்கும் உங்களுடையதே - உங்களது பெயரை, அல்லது முகவரியை, வேலையை மாற்றிக் கொண்டாலும், மாநிலம் விட்டு மாநிலம் குடிமாறிச் சென்றாலும் அல்லது வெளிநாட்டிற்கே சென்று விட்டாலும் கூட, நீங்கள் இதே TFN எண்ணை வைத்துக் கொள்கிறீர்கள்.

வேறு எவரும் உங்களது TFN எண்ணை உபயோகிக்க அனுமதிக்காதீர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்களையும் அனுமதிக்காதீர்கள். வேறு யாரோ ஒருவரை இதை உபயோகிக்க அனுமதிப்பது, இதை வெளியே கொடுத்தனுப்புவது அல்லது விற்பனை செய்வதென்பது ஒரு குற்றமாகும்.

உங்கள் TFN -எண்ணை பின்வருபவர்களிடம் மட்டுமே கொடுங்கள்:

  • எங்களிடம், உங்களது வரிப் பதிவுகளை விவாதிக்கும் போது
  • உங்கள் பணியை ஆரம்பித்த பிறகு உங்களைப் பணியமர்த்தியுள்ளவரிடம், ஆனால் இதை உங்களது வேலை விண்ணப்பங்களில் தராதீர்கள்
  • உங்களது வங்கி அல்லது மற்ற நிதி நிறுவனங்களிடம்
  • Services Australia
  • உங்களது பதிவு பெற்ற வரி முகவர்
  • உங்கள் பணிஓய்வு (ஓய்வூதிய) நிதி
  • Higher Education Loan Program (HELP) போன்ற, மாணவர் ஒருவரது கடனை அணுகிப் பெற, உங்களுக்கு உயர்கல்வி அளிக்கும் நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திடம்.

உங்கள் TFN தொலைந்து விட்டதாகவோ, திருட்டுப் போய்விட்டதாகவோ, அல்லது காணாமல் போய்விட்டதாக வோ நீங்கள் நினைத்தால், அதை உடனடியாக எங்களிடம் புகார் தெரிவித்திடுங்கள்.

அடையாளக் குற்றத்தைத் தவிர்க்க உதவுவதற்கு, உங்களது தனிப்பட்ட அடையாள விவரங்களை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். அடையாளக் குற்றம் என்பது, குற்றங்களைப் புரிவதற்காக மக்களின் அடையாள விவரங்களை உபயோகிக்கும் போதே நடைபெறுகிறது. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்:

  • எவரிடமும் - உங்கள் வரி முகவரிக்கு அது தேவையென்றாலும் கூட (அப்படியொருவரை நீங்கள் உபயோகித்தால்), உங்கள் myGov அல்லது மற்ற இணையவழி கடவுச்சொற்களைப் பகிர்ந்திடாதீர்கள்
  • மின்னஞ்சல்களில், உங்களது TFN, கடவுச்சொற்கள் அல்லது மற்ற நுட்பமான தகவல்களைப் பகிர்ந்திடாதீர்கள்.

மோசடி மின்னஞ்சல்கள், தொலைநகல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஆகியவை பார்வைக்கு நல்லவையாகவும், மனதிற்குத் திருப்தியானவையாகவும் தோன்றலாம். இவற்றைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள், ஒரு தகவல் தொடர்பு எவரிடமிருந்து வருகிறது என்று உங்களுக்கு உறுதிபடத் தெரியவில்லை என்றால், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது சென்று பாருங்கள்: மோசடி ஒன்றை சரிபாருங்கள் அல்லது புகார் அறிவித்திடுங்கள்.

இதையும் பாருங்கள்:

QC63668